பெங்களூரில் வன்முறை நடைபெற்றது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறு கருத்தை பதிவிட்டதாகக் கூறி சென்ற திங்கட்கிழமை பெங்களூருவில் 100க்கும் மேலானோர் திரண்டு எம்.எல்.ஏ.வின் வீட்டையும், 2 காவல் நிலையங்களையும் தாக்கியது மட்டுமில்லாமல் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தி கலவரமாக்கினர். இந்த வழக்கில் 146 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி கவுன்சிலர் இர்சாத் பேகத்தின் கணவர் கலீம் பாசா உள்பட மேலும் 60 பேரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து இருப்பதாக பெங்களூரு மாநகரக் காவல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். சேதமடைந்த பொது சொத்திற்கான தொகையை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று மாநில மந்திரி பொம்மை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.