பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் விடுதலை பெற்றது. அதுவரையில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான், விடுதலைக்கு பிறகு தனி நாடாக பிரிந்து சென்றது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சுதந்திரமான இஸ்லாமிய தேசம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, முகமது அலி ஜின்னாவின் தலைமையில் அனைத்து இந்திய முஸ்லிம் லீக் அமைப்பின் தீவிர முயற்சியால் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்திய விடுதலைச் சட்டம் 1947-ன் படி, வடக்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இஸ்லாமிய காலண்டரின் ரமலான் மாதத்தில் 27 ஆம் தேதியன்று விடுதலை வழங்கப்பட்டது.
அதனை நினைவு கூறும் வகையில் பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் பலர் சுதந்திர தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவிட்டு வருகின்றனர். நாளை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பாகிஸ்தானியர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு டுவிட்டரில் “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளனர்.