தன் மகளை காதலிப்பதை நிறுத்துமாறு கண்டித்த தந்தையை காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றபள்ளிப் பகுதியில் வசித்து வந்தவர் தணிகை மணி. இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தணிகைமணியின் மூத்த மகளை அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் சிலம்பரசன் என்பவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் தணிகைமணிக்கு தெரிய வரவே, நேற்று முன்தினம் இரவு சிலம்பரசனை கூப்பிட்ட தணிகைமணி காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்த்து தணிகைமணியை இறைச்சியை வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை கத்தியால் வெட்டிய சிலம்பரசன் உட்பட ஆறு பேரை வலைவீசி தேடிவந்தனர்.
இதையடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட, காவல் துறையிலிருந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில், சிலம்பரசன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள இரண்டு பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.