ஈரானிலிருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா,பாண்டி, பெரிங், பெல்லா ஆகிய நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதுபோலவே எண்ணெய் வளமிக்க தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலா மீதும் அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் இருந்து வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச கடலில் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது என்பது கட்டாயம் சாத்தியமில்லாதது என்று பொருளாதார தடை நிபுணர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஈரானில் இருந்து 11 லட்சம் பேரரில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வெனிசுலாக்கு புறப்பட்டு சென்ற லூனா,பாண்டி, பெரிங், பெல்லா என்ற நான்கு சரக்கு கப்பல்களும் திடீரென மாயமாகின. அந்த கப்பல்களில் நிலை பற்றி தற்போது வரை தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஈரானின் நான்கு சரக்கு கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து இருப்பதாக கூறியுள்ளது.