கன்னியாகுமரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி சாதனை ஒன்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகள் யுதிஷா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யுதிஷா நாள்தோறும் வேலைக்குச் சென்று, அதற்கிடையே அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். ஒருபுறம் வேலை, மறுபுறம் படிப்பு என்று இருக்கும் பட்சத்தில் தனி திறமையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். இதற்கு முழு ஒத்துழைப்பை அவரது ஆசிரியர்களும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் குறைந்த நேரத்தில் திருக்குறளை சொல்லும் அசாத்திய திறமை யுதிஷாவுக்கு இருப்பதை அப்பள்ளி தலைமையாசிரியர் கண்டறிந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நன்றாக பயிற்சி அளித்த நிலையில், 3 நிமிடம் 23 நொடிகளில் 250 திருக்குறள்களை ஒப்புவித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளார். இவருக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநேரே தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பயின்று வரும் இந்த மாணவியின் திறமையை கணக்கில் கொண்டு அவரது மேற்படிப்புக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.