கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை கண்டிப்பாக தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாக உள்ளது. நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை நாம் தவிர்க்கலாம்.
இதற்கு தலைவர்கள், அமைச்சர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். அவர்கள் அதிகாரிகளை தங்களது அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து ஆலோசிக்குமாறு அழைக்கக் கூடாது. பல அலுவலகங்கள் மூடிய நிலையில் குளிரூட்டப்பட்டவையாக உள்ளன. இதனால் அதனுள் உள்ள காற்றே திரும்ப திரும்ப சுற்றி சுழன்று வருகிறது. இதனால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இது சமீப காலத்தில் நடந்தும் உள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்” என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.