பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இதுவரை 1.53 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு பெற உள்ளதால், விடுபட்டவர்கள் உடனே பதிவு செய்யவேண்டும் எனவும், வாய்ப்பை தவறவிட்டு விட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.