மதுரை அருகே பட்டப்பகலில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை அடுத்த திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் தேதிமுகவின் முக்கிய பிரமுகர் ஆவார். மேலும் இவர் மேலூர் யூனியன் தொகுதியின் முன்னாள் கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில் நேற்று திருவாதவூர் பகுதிகளில் இருந்து மேலூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் பாண்டியன் சென்று கொண்டிருக்கும் போது அவரை திடீரென வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக செந்தில் பாண்டியனை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில், சம்பவ இடத்தில் செந்தில் பாண்டியன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை அங்கே இருந்தவர்கள் கண்டதும் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் செந்தில் பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் பாண்டியனின் தம்பி இதே பாணியில் கொலை செய்யப்பட்டதும், அவரை தொடர்ந்து அண்ணனும் கொலை செய்யப்பட்டதால், முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம்.
மேலும் செந்தில் பாண்டியன் மீது கஞ்சா கடத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் அடிக்கடி பல மோதல்களும், கொலைகளும் நடந்திருப்பதால் அதில் ஒரு கொலைக்கு பழி தீர்ப்பதற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.