குற்ற வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மேனகா என்பவர், கடந்த ஆண்டு மாமியாரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். நிபந்தன ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவர், அய்யனாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 20 நாட்கள் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது அப்பெண்மனிக்கு கணவர் இல்லாததை அறிந்த அய்யனாவரம் ஆய்வாளர் நடராஜன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை அடுத்த இந்திரா நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் தனது மகள் மற்றும் மகனை தங்க வைத்துள்ளார். அங்கு கடந்த 10ம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவலர்கள் சென்று உறங்கிக்கொண்டிருந்த மேனகாவின் மகன் மற்றும் மகளை மேனகாவை கேட்டு துப்பாக்கியால் மிரட்டி உள்ளனர். மேலும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதால் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட பெண் மேனகா வேதனை தெரிவித்துள்ளார்.