அதிநவீன தனியார் ரயில்கள் 2023-ம் ஆண்டுக்குள் இயங்க தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்க அனுமதிப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்., இத்திட்டம் ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகைை செய்யும். தனியார் ரெயில்களை இயக்குவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் 23 நிறுவனங்கள் ஆர்வமாக கலந்து கொண்டன. தனியார் ரெயில் பெட்டிகள், ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். ரெயில்வேயின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த, தனியார் ரெயில் நிறுவனங்களிடம் ரெயில்வே கட்டணம் வசூலிக்கும்.
டிக்கெட் முன்பதிவு வசதியை அளிப்பதற்கும் கட்டணம் வாங்கிக்கொள்ளும். 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் ரெயில்களுக்கான விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையில் ரெயில்வே நிர்வாகம் கூறிய அறிவிப்பில், ” குறிப்பிட்ட வழித்தடங்களில் எந்தெந்த ரெயில் நிலையங்களில் தனியார் ரெயில்கள் நின்று செல்லலாம் என்பதை அவற்றை இயக்கும் தனியார் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், அதை முன்கூட்டியே ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் ரெயில் இயக்கும் திட்டத்தில் இது ஒரு அங்கமாக இடம்பெற வேண்டும்.
ஆனால், ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதே வழித்தடத்தில் நிறுத்தும் நிலையங்களின் எண்ணிக்கையை விட அது அதிகமாக இருக்கக்கூடாது. நிறுத்தப்படும் நிலையத்தில் எந்த நேரத்தில் ரெயில் வந்து சேரும், எந்த நேரத்தில் புறப்படும் என்பதையும் அத்திட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த நிறுத்தங்கள், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அமலில் இருக்க வேண்டும். அதன் பின் மாற்றிக் கொள்ளலாம். எந்த ரெயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புவது, எந்த ரெயில் நிலையத்தில் சுத்தப்படுத்துவது என்ற தகவல்களும் திட்டத்தில் இடம்பெற வேண்டும். சந்தை சூழ்நிலையை பொறுத்து, தனியார் நிறுவனங்களே கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.