கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சென்ற மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. சென்ற ஒரு வார காலமாக 7 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மக்கள் பிரதிநிதிகளும் தப்பவில்லை. ஏற்கனவே முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விஜயாப்புரா மாவட்டம் தேவரஹிப்பரகி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் பாஜக கட்சியை சேர்ந்த சோமனகவுடா பட்டீல் சாசனூர். சென்ற சில நாட்களுக்கு முன்பு சோமனகவுடாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் நலமாக உள்ளேன். எனது தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விரைவில் மக்கள் பணிக்கு திரும்பி வருவேன். சென்ற சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். சோமனகவுடாவுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.