இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு தொற்று ஏற்பட்டு 941 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும் மொத்தம் 26,47,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 941 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,921ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,900 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.93 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 71.91 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 7,31,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,00,41,400 ஆக அதிகரித்து வருகின்றது.