வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றங்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட தொடங்கிவிட்டன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பின் மூலம் திட்டமிட்டபடி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.