பாரதிய ஜனதா கட்சி தனக்கு எம்பி சீட் கொடுக்க முன்வந்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
தமிழில் ‘தாம் தூம்’ என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது இந்தியில் 12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இளம் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறமையாக செயல்பட்டு வருவதாக பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர முடிவு செய்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது “எனக்கு பாரதிய ஜனதா கட்சி எம்பி தேர்தலில் போட்டிட சீட் கொடுக்க முன் வந்தது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எனது தாத்தா எம்.எல்.ஏவாக இருந்தார். நான் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். அது பற்றி நான் சிந்திக்கவும் இல்லை, எனக்கு அரசியலில் விருப்பமும் இல்லை. நடிப்பில் தான் எனக்கு மிகுந்த ஆர்வம். ஆனாலும் என்னுடைய கருத்துக்களை நான் சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.