தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அரிஸ்சன் எஸ்டேட் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்ககடல், ஒடிசா மேற்கு கடலோரப் பகுதிகள், மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா மாநில கடலோரப் பகுதிகளில், பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.