புதுச்சேரியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு தலா 250 ரூபாய் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், “புதுச்சேரியில் மட்டும் 1,088 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 8 ஆயிரத்து 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உள்ளது. 1692 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இதுவரை 4,627 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தலா 250 ரூபாய் நாள் ஒன்றுக்கு உணவுக்காக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த தேவையில்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.