எம்எஸ் தோனியின் ஓய்வின் முடிவிற்கு மீடியாக்களின் விமர்சனங்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என அவரின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது.
இதனால் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் – நவம்பரில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவில் டி-20 உலக கோப்பை 2021ல் நடக்க உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளதால் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தோனி சிறுவனாக இருந்தபோது அவருக்கு பயிற்சியாளராக இருந்த கேசவ் ரஞ்சன் பானர்ஜி மீடியாக்களின் விமர்சனங்கள் ஓய்வு முடிவிற்கு தள்ளியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்” 2019 உலகக் கோப்பைக்கு பிறகு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அப்படியிருக்க எப்படி சர்வதேச போட்டிக்கு மீண்டும் திரும்ப முடியும் என ஏராளமான மீடியாக்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வு குறித்து முடிவெடுக்க இது முக்கிய காரணமாக இருந்திருக்குமா? என்பது எனக்கு தெரியாது.
ஆனால் இந்த முடிவிற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தோனியால் மட்டுமே அது குறித்து விளக்கம் அளிக்க முடியும். தோனி இன்னும் ஒரு வருடம் விளையாடி இருக்கணும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் விளையாடி இருக்கலாம். அவரின் உடல் தகுதியை பொருத்தமட்டில் எளிதாக விளையாடலாம். இது எனது கருத்து மட்டுமல்ல ஏராளமானோரின் கருத்தும் இதுதான். எல்லாம் முடிந்துவிட்டது. அவரது ஓய்வு பேரிடியாக உள்ளது. அதேவேளை உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.