தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன.
இதே கோரிக்கையை தான் தமிழக பாஜகவும் முன்வைத்தது. தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் சன்றுமுன் முதல்வரை சந்தித்து நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் சிலையை மட்டும் நிறுவுவதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும், பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும், அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக தமிழக முதல்வர் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் சந்தித்து சென்ற சில நிமிடங்களில் தமிழக டிஜிபி திரிபாதி முதல்வரை இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் டிஜிபி திரிபாதி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு விநாயகர் சதுர்த்தி அனுமதி சார்ந்த விஷயமாக கருதப்படுகிறது. என்ன இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் முதல்வருடான் டிஜிபி சந்தித்ததின் நோக்கம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.