நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நாய்களை உணவாக பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிகாரிகள் குடிமக்களிடம் இருந்து நாய்களை பறித்துச் சென்று ஹோட்டல்களுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள், வட கொரிய அதிபரை முதுகுக்குப் பின்னால் சபித்து வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் செல்லப்பிராணியை வளர்த்து வருபவர்கள், அதனைக் கொடுக்க மறுத்தால், அது நாட்டின் தலைமைக்குக் கீழ்படிய மறுத்ததாக கருதப்படும் என்ற காரணத்தினால் வேறு வழி இல்லாமல் மக்கள் செல்லப் பிராணிகளை ஒப்படைத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் 25.5 மில்லியன் மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். அணுவாயுத திட்டங்கள் காரணமாக வட கொரியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால், அந் நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. மற்றொரு பக்கம் கொரோனாவால் சீன எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், தன் நாட்டு மக்களின் உணவுத் தேவைக்காக சீனாவை அதிகம் சார்ந்துள்ள வடகொரியாவில் நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது.
அதுமட்டுமன்றி கடந்த ஆண்டு அந் நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் வருகின்ற மாதங்களில் நாய் இறைச்சி தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பசியை போக்க போகிறது.