Categories
தேசிய செய்திகள்

94% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… “ஆன்லைன் வகுப்புகள் எவ்வாறு கற்பது?”… க்ரை அமைப்பு கேள்வி…

ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கு 94% மாணவரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என க்ரை அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கு ஆன்லைன் முறைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் இருக்கின்றனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக மாநிலங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பான ‘க்ரை’ அமைப்பு 11 முதல் 18 வயது வரையிலான 5,987 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது.

நடத்தப்பட்ட ஆய்வில் 94 சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது இணையதள வசதி போன்றவை இல்லை என தெரியவந்துள்ளது. 6 சதவீத மாணவர்களுக்கே ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. 29 சதவீதத்தினர் தங்கள் குடும்பத்தினரின் போன்களை உபயோகிக்கின்றனர். அதுவும் இதில் 55 சதவீதத்தினர் வாரத்துக்கு 3 அல்லது அதற்கு குறைவான நாள்கள்தான் போன்களை பயன்படுத்த முடிகிறது.

77% பேர் நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என கூறியுள்ள ‘க்ரை’ நிர்வாகிகள், இதனால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |