Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் காவல் துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியின் கடற்கரையோரத்தில் புதிதாக நட்சத்திர ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவே ஏராளமான இளம் பெண்கள் மற்றும் வாலிபர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஹோட்டலின் நுழைவாயிலில் நிறுத்தி அதனை வெடிக்கச் செய்தார். அதன்பிறகு கார்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த அனைவரையும் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படை வீரர்கள், ஹோட்டலை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. அந்தத் துப்பாக்கி சண்டை 5 மணி நேரத்திற்கு மேல் நீடித்த நிலையில், 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று, அவர்களின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ஆனால் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

Categories

Tech |