பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றுவதற்கு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் பெயரில் பெறப்பட்ட நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி Centre For Public Interest Litigation சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேசிய பேரிடர் சட்ட விதிகளுக்கு எதிராக இந்த பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாமல் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது? எதெற்கெல்லாம் செலவிடப்பட்டுள்ளது? போன்ற விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேட்டால் பிரதமர் அலுவலகம் தர மறுக்கிறது. அதனை ரகசியமாக வைத்துள்ளது. எனவே, கொரோனா பேரிடருக்காக பெறப்பட்ட இந்த நன்கொடை நிதியை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.