ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை இப்பொழுது காணலாம்.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள்13 பேர் கொல்லப்பட்டனர். 2018 மே 28-ஆம் தேதி காற்று நீருக்கு மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது.
ஓய்வு பெற்ற நீதிபதிதருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி ஸ்டெர்லைட் நிருவாகமும் மனுத்தாக்கல் செய்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. 2019 பிப்ரவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. 2019 ஜூன் 27ஆம் தேதி முதல், சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது.மொத்தம் 39 நாட்கள் இந்த விசாரணை நடைபெற்றது. 2020 ஜனவரி 8 ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதியில்லை என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.