மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்த நிலையில், தீயணைப்பு, மீட்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை 58 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவரின் சடலத்தை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். இதனால், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.கிராவல் வங்கிப் பகுதியில் இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போதுவரை தெரியவரவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு, மீட்புப் படையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.