அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரையில் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளே பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடந்திருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.
அதே சமயத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதவிர சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வருகின்ற 24ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.