திருவாரூர் அருகே சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை தொடர்ந்து ஆகஸ்டு 31 வரை நீட்டித்து பல மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும், இந்த ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதால், மக்கள் சுதந்திரத்துடன் வெளியே நடமாடி வருகின்றனர். அன்றாட வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் மட்டும் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து உரிய முறையில் ஊரடங்கு தளர்வுகளை நீக்கி விதிமுறைகளை வலுப்படுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் என்னும் பகுதியில் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் நன்னிலம் பேரூராட்சியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்படும் என்றும், மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.சமீபத்தில் இப்பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.