நடிகை நயன்தாராவின் பெயரில் பேய் படம் உருவானது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குனரான அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காதம்பரி’. இப்படத்தின் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார். மேலும் நிம்மி, அகிலா நாராயணன், பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாக்கிய படம் காதம்பரி. இப்படத்தைப் பற்றி இயக்குனர் அருள் கூறுகையில் “சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இருந்த நயன்தாராவின் பெயரான காதம்பரி இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது.
குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பேய் படங்களை போன்று இல்லாமல் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்” என்று கூறியுள்ளார். இப்படத்தின் டிரைலரை புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். முதலில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் புதிதாக ஒரு படம் இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், தான் நினைத்த தலைப்பை வேறு ஒரு படத்திற்கு வைத்ததால் வருத்தத்தில் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டிரைலரை வெளியிட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.