ஊரடங்கு காரணமாக பல கோடி மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு இருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 கோடியே 15 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் விற்பனை செய்வோர்கள் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து வந்த செய்தியை தனது ட்விட்டர் பதிவில் இணைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் பதிவிட்டு இருப்பதாவது,
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் தங்களுடைய பணியை இழந்து உள்ளனர். 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கி இருக்கிறது. வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது. பேஸ்புக்கில் போலி செய்திகளையும், வெறுப்புகளையம் பரப்புவதன் மூலம், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.