பிற மருத்துவத் துறையை ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு பார்க்கிறது என கண்டனம் எழுந்துள்ளது.
சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்ற 10 வருடங்களில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையை வாசித்த நீதிபதிகள், மத்திய அரசு மாற்றான் தாய் மனசு போல நடந்து கொள்வது ஏன் என்றும், சித்த மருத்துவத்துவ துறைக்கு, மற்ற மருத்துவ துறைகளை விட குறைந்தபட்ச நிதி ஒதுக்கியுள்ளது துரதிருஷ்டவசமானது என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தை குறித்துக் காட்டும் ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கிவிடலாம் எனவும் கண்டனம் தெரிவித்தனர்.