அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இந்துகளின் வாக்குகளை கவர டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு சதவீதம் மக்கள் இந்துக்களாகும். அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், இந்து சமூகத்தின் வாக்குகளை கவரும் வண்ணம் தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் உள்ள இந்துக்களுக்கு மத சுதந்திரங்களுக்கான தடைகளை குறையும், என டிரம்பின் பிரச்சார குழு உறுதியளித்துள்ளது. அதேபோல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்து நம்பிக்கை சமூகத்திற்கு முன்னுரிமை அளிப்பார் என அவரது பிரச்சார குழு தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் அமெரிக்காவில் உள்ள பிரபல இந்து தலைவர் நீலிமா கோணுகுண்டாலா கலந்துகொண்டு வேத மந்திரங்களை படித்தார். இதற்கிடையில் அமெரிக்க தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக “ட்ரம்பிற்கான இந்து குரல்கள்” எனும் அமைப்பை பிரச்சாரக் குழு தொடங்கியுள்ளது.