உகான் நகரின் நீச்சல் குளம் விருந்து படங்களை முதல் பக்கத்தில் வெளியிட்டு சீனப் பத்திரிகைகள் ஆதரவு அளித்துள்ளன.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதில் உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பி விட்ட உகான் மக்கள் எந்த தடையும் இல்லாமல் நகரில் விருந்து நிகழ்ச்சிகளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந் நகரில் நடந்த நீச்சல் குள விருந்து படங்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.
கொரோனா பரவுவது குறித்த கவலைகளுக்கு மத்தியில், சீனாவின் உகான் நகரத்தில் பூங்கா ஒன்றில் அடர்த்தியாக சீனர்கள் நிரம்பிய நீச்சல் குள விருந்தின் படங்கள் வைரலாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து சீன அரசு செய்தித்தாள்கள் இந்த படங்களை தங்களது முதல் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். நகரத்தில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவது இந்த படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சீனா இன்று அதன் நான்காவது நாளாக உள்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் இல்லை என அறிவித்துள்ளது.