தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று 381 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
தலைநகர் சென்னையானது தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து கிழக்கு இந்தியக் கம்பெனி சின்ன நிலத்தை வாங்கி பெரிய நகரை உருவாக்கி உள்ளதாக வரலாற்றில் உள்ளது. அந்த வகையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், அரசு அருங்காட்சியகம், சாந்தோம் தேவாலயம் போன்ற பல சிறப்பம்சங்கள் சென்னையின் பழமையை நம் கண்முன்னே கொண்டு வருகிறது. சென்னையின் மிக முக்கியமான பெருமையாக கருதப்படுவது பரந்து விரிந்த வங்காள விரிகுடாக் கடல் தான். ஆசியாவின் 2வது பெரிய கடற்கரையாக கருதப்படும் மெரீனாவின் மணற்பரப்பு பார்ப்போரை பரவசப்பட வைக்கிறது.
இத்தகைய ஏராளமான சிறப்பம்சங்களை தன்னுள்ளே கொண்டுள்ள சென்னை நகரம், இன்று 381 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடக்கும் சென்னை, சீக்கிரம் உற்சாகத்துடன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. மேலும் இந்த பிறந்தநாளன்று, தூய்மையையும், அமைதியையும் பேணிக்காத்து, சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல், கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுடன் அடுத்து வரும் நமது சந்ததியினரிடம் அப்படியே ஒப்படைக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் உறுதி மொழி எடுப்பது தலையாய கடமையாகும்.