Categories
உலக செய்திகள்

சீன விமானத்தைத் திருப்பி அனுப்பிய பப்புவா நியூ கினியா… காரணம் என்ன?…!!!

சீன விமானத்தில் வந்த 180 சுங்க தொழிலாளர்களை குட்டி நாடான பப்புவா நியூகினியா திருப்பி அனுப்பியுள்ளது.

சீனாவில் சினோபார்ம் என்ற அரசு மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்கு அரசின் அனுமதியை நாடியுள்ளது. ஆனால் அரசு அனுமதி பெறுவதற்கு முன்னரே அந்த நிறுவனம் தமது ஊழியர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்து உள்ளது. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவில், சீனாவின் ராமு நிக்கோ மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் 48 சீன தொழிலாளர்களை சினோபார்ம் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு சீனா அனுப்பி வைத்தது.

அதன்படி கடந்த 13ஆம் தேதி போர்ட் மோராஸ்பி நகருக்கு தொழிலாளர்கள் சென்றடைந்தனர். ஆனால் அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி குறித்த எந்த ஒரு தெளிவான தகவல்களையும் பப்புவா நியூகினியா நாட்டு அரசுக்கு தெரிவிக்கவில்லை. அதே சமயத்தில் 48 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டிருப்பது குறித்த ஒரு அறிக்கையை மட்டும் பப்புவா நியூகினியா சுகாதார அமைச்சகத்துக்கு ராமு நிக்கோ மேனேஜ்மென்ட் நிறுவனம் அனுப்பியுள்ளது. அதனால் சந்தேகமடைந்த பப்புவா நியூகினியா அரசு தடுப்பூசி பரிசோதனைக்கு தடை விதித்தது.

இந்நிலையில் மேலும் 180 சுரங்கத் தொழிலாளர்களை விமானம் மூலமாக போர்ட் மோரஸ்பி நகருக்கு சீனா அனுப்பி வைத்தது. அதனை அறிந்த பப்புவா நியூகினியா அந்த விமானத்தைத் திருப்பி அனுப்பியது. இது குறித்து அந்நாட்டின் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டாளர் டேவிட் மேனிங், போர்ட் மோராஸ்பி நகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சீனாவின் தடுப்பூசி பரிசோதனைகள் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்த சோதனைகள் என்ன என்பதை தெளிவாக கூறாத நிலையில், சீனத் தொழிலாளர்கள் இங்கு வந்தால், அவர்களால் நமது நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

அதனை கருத்தில் கொண்டு நமது மக்கள் மற்றும் நம் நாட்டின் சிறப்பு நலன்களை உறுதி செய்யும் வகையில் சீன விமானத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பி உள்ளோம். எந்த ஒரு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கும் நமது நாட்டின் தேசிய சுகாதார துறை அனுமதி தரவில்லை. நமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எந்த ஒரு தடுப்பூசியும் தேசிய சுகாதார அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகுதான் தீவிரமான தடுப்பூசி சோதனை, நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள் வழியாக செல்ல இயலும்.

அது மட்டுமன்றி அந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் முன் அனுமதியையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். பப்புவா நியூகினியா ஒரு ஏழை நாடு. அங்கு 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டில் தற்போது வரை 361 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 4 பேர் மட்டுமே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |