கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியதில் 367 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வடக்கு கலிபோர்னியா மாகாணம் காட்டுத்தீயால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. மேலும் பாலோ, ஆல்டோ, நாபா ஆகிய இடங்களில் பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீயால் ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான காடுகள் மற்றும் வீடுகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. காட்டுத்தீயால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுவரை 750 சதுர மைல் பரப்பளவில் காடுகள் எரிந்து சாம்பலாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர். 175 குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக சேதமடைந்ததால், 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயை அணைக்க அரிசோனா, டெக்சாஸ் மற்றும் நெவாடா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து 375 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.