ஈரான் அதிகாரிகள் 13 பேர் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பெரும் மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் மீதான ஐநா ஆயுத தடை வருகின்ற அக்டோபர் மாதம் முடிவடைகின்றன நிலையில், அந்தத் தடையை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதன் முயற்சி தோல்வியடைந்ததால், ஈரானுக்கு எதிராக பல்வேறு மாற்று நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமான மிள் தடையை பயன்படுத்தி ஈரான் மீதான ஐநா பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சி செய்து வருகின்றது.இந்நிலையில் ஈரானை சேர்ந்த மூத்த அதிகாரிகள் 13 பேர், ஈரானிய ஆட்சியின் சார்பாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ வெளியிட்டுள்ளார்.
ஈரானை கடுமையாக கண்டித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஈரான் தனது பயங்கரவாத ஆட்சியை பரப்புவதற்காக மற்ற நாடுகளில் படுகொலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது.அது மட்டுமன்றி உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவாளராக ஈரான் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஈரான் அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிப்பதன் மூலமாகவும் ஈரான் அரசால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமெரிக்கா தனது ஆதரவு செய்தியை அனுப்புகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.