தமிழ்நாட்டில் இ – பாஸ் முறை தளர்வு அமலுக்கு வந்தால் அது சற்று சவாலான விஷயமாகம் என விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது பேசிய விஜய்பாஸ்கர், ” கோவையில் இதுவரை 8,532 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மேலும் இங்கு 78 சதவீத மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கோவையில் மட்டும் ஒரு லட்சத்து 77,706 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுளளன.
சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கோவையிலும் நடத்த திட்டமிட்டு இருக்கின்றன. மேலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. நோயின் ஆரம்ப கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சமாக இந்தியாவிலேயே ஆர்டிபிசிஆர் டெஸ்ட் இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் தான் எடுக்கப்படுகிறது.
மேலும் இந்த காலகட்டத்தில் இ பாஸ் முறை தளர்வு குறித்து யோசித்தால் அது சற்று சவாலான விஷயமாகும். அப்படியே இ- பாஸ் முறை தளர்வு அமலுக்கு வந்தாலும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படும். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கடைசி காலகட்டத்தில் பார்க்காமல் புறக்கணித்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டை பொருத்தவரை 25 சித்த மருத்துவ மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.