மேயர் பதவிக்காக அனுதாப ஓட்டுக்களை பெறும் திட்டத்தில் போலி வீடியோவை சபரினா வெளியிட்டு காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார் .
சபரினா பெல்ச்சர் என்பவர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர். கருப்பின பெண்ணான இவர் சம்ப்டர் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்களிடையே அனுதாப வாக்குகள் பெறுவதற்காக யாரோ தன்னை கடத்தியதாக போலியான வீடியோவை வெளியிட்டு மாட்டிக்கொண்டார். சபரினாவை காவல்துறையினர் போலி கடத்தலை அரங்கேற்றியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக் லைவ்வில் இந்த கடத்தல் வீடியோவை அப்படியே ஓட விட்டிருக்கிறார். கிறிஸ்டோபர் எட்டி என்ற இளைஞன் இந்த போலியான வீடியோ எடுப்பதற்காக உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு நபர் தன்னிடம் கொள்ளையடிக்க முயன்றதாகவும், தன்னுடைய கார் கதவுகளை உடைத்து தன்னை கடத்தியதாகவும் சபரினா காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த நபர் தனக்கு யார் என்று தெரியாது எனவும் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை தாக்கியதாக கூறப்பட்ட மனிதரான எட்டியிடம் விசாரணை மேற்கொண்டதில் சபரினாவுக்கு, அவர் முன்பே அறிமுகமானவர் என்பது தெரியவந்தது. இந்த போலியான வீடியோவை சில நாட்களுக்கு முன்பு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இச்செயல் தனிப்பட்ட லாபத்திற்காக சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் முயற்சி என சபரினாவை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். சபரினாவுடன் சம்ப்டர் நகர மேயர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தற்போதைய மேயர் ஜோ மேக்ல்வீன் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.