தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து மாநில அரசு தளர்வுகளை பிறப்பித்துக்கொள்ளலாம், இ-பாஸ் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழிகாட்டல்களை வழங்கி இருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் பொது முடக்கத்தை அறிவித்தபோது மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் இ- பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவித்திருந்த மத்திய அரசு மாநில அரசுகள் தங்களது முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சார்பில், அனைத்து மாநில செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பல மாநிலங்கள் இ-பாஸ் முறையை இரத்து செய்தன. அண்டை மாநிலமான புதுவையும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை… ஆனால் இ-பாஸ் முறையை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இ- பாஸ் முறையை ரத்து செய்யலாமா ? வேண்டாமா ? என்பது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இ- பாஸ் நடைமுறையை தொடரலாமா ? வேண்டாமா என்று அதிகாரிகளுடன் இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதன் பிறகு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.