கொரோனாவை மையமாக கொண்டு 9 ஆம் வகுப்பு மாணவர் ஒரு கேமை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே மணிப்பூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். பல்தீப் நிங்தோஜம் என்ற இந்த மாணவர் அவர் உருவாக்கியுள்ள கேமிர்க்கு கொரோபாய் என பெயரிட்டுள்ளார். ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேமை டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து மாணவர் கூறுகையில், “கொரோனா தொடர்பாக ஒரு கேமை உருவாக்க என் மாமா எனக்கு யோசனை சொன்னார். அதனால் நான் இதில் ஆர்வம் காட்டினேன். கேமை உருவாக்கும் பணி கடந்த வாரம் நிறைவடைந்தது, நேற்று முன்தினம் அறிமுகம் செய்தேன். இது எனக்கு புதிய முயற்சியாகும்.அதனால் கேம் தொடர்பான தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள யூடியூப் மூலம் தேடினேன். 3, 4 வாரங்களுக்கு கட்டுரைகளைப் படித்தேன். அதன்பின் இந்த கேமை உருவாக்கினேன். வருங்காலத்தில் நான் ஒரு நெறிமுறை ஹேக்கர் ஆக விரும்புகிறேன். அத்துடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்” இவ்வாறு கொரோபாய் கேமை தயாரித்த பல்தீப் நிங்தோஜம் என்ற மாணவர் கூறினார்.