இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, தாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தினர், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த ஜூலை மாதம் வான் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை சார்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதனால் இஸ்ரேல் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்ததால், லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் ஆளில்லா விமானம் ஒன்று லெபனான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அமைப்பு கூறியது.
ஆனால் இஸ்ரேல் ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து, தொழில்நுட்ப கோளாறால் தான் இந்த விபத்து நடந்தது என்று கூறியது. இந்நிலையில் லெபனானின் இஸ்ரேல் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அய்டா அஷ் ஷாப் என்ற கிராமத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானம் நேற்று திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து அறிவதற்கு இஸ்ரேல் ராணுவம் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, தங்கள் நாட்டின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை தாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று கூறியுள்ளது.