12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான தகுந்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் எதுவும் தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா புள்ளி விபரங்களை காட்டிலும், அதிக அளவு பாதிப்புகள் இருக்கின்றன. போதுமான அளவிற்கு பரிசோதனைகளை உலக நாடுகள் நடத்துவதில்லை. மேலும் அறிகுறிகள் இல்லாமல் கொரோனாவால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது. அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்ய தவறினால் கட்டாயம் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும். அதனால் இந்த வயதுடைய குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 6 வயது முதல் 11 வயதுடைய குழந்தைகளைப் பொறுத்தவரையில், அவர்கள் வசிக்கின்ற பகுதியில் கொரோனா பரவல் எப்படி இருக்கின்றது என்பதையும், முதியவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்களுடன் குழந்தைகள் தொடர்பில் இருக்கின்ற நிலை இருப்பதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகள் முகக்கவசம் அணியவும், அதனை அகற்றுவதற்கும் பெரியவர்கள் உதவி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நல பிரச்சனை உடையவர்கள் அனைவரும் கட்டாயம் மருத்துவ முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விதிமுறைகளை பின்பற்றி பிரான்ஸ் தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.