நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தில் இருக்கும் வீட்டில் 75 வயதில் பவளவாய் என்ற மூதாட்டி தன்னுடைய மகன் வேலுச்சாமியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி நேற்றிரவு முகம், கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் மகள் வந்து பார்த்தபோது, பவளவாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவலளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வேலுச்சாமியின் மனைவி பிரிந்துசென்ற நிலையில் தாயும், மகனும் தோட்டத்தில் இருக்கும் வீட்டில் வசித்துவந்தனர். பவளவாய் தன்னுடைய சொத்துகளைப் பேரன்களுக்கு எழுதிவைத்த நிலையில், பவளவாயிக்கும் வேலுச்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது.
இதனால் வேலுச்சாமி தனது தாயை கொலைசெய்துவிட்டு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.