மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் வியாழக்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆனால் இந்த வகுப்புகள் மூலம் எல்லா மாணவர்களும் பயனடைகிறார்களா? என்றும், ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதாகவும், மேலும் ஆபாச படங்கள் குறுக்கீடுவது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடந்த விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உலகம் முழுவதுமே ஆன்லைன் மூலம் தான் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருவதாக கூறினார். அப்போது அதற்கு எதிர்க்கருத்தாக கூறிய நீதிபதிகள், மலைப் பகுதியில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு எப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது? மேலும் ஒரு வீட்டில் ஒன்றுக்கு அதிகமான குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு எப்படி பாடங்கள் நடத்தப்படுகிறது? இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றி நடக்காத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய கேள்விக்கு வருகிற 27ம்தேதி விரிவாக விளக்குமாறு உத்தரவிட்டு விசாரணை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.