புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவரின் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்றார். அவருடன் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் மற்றும் தலைமை செயலர் அஸ்வனி குமார் ஆகிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மட்டுமன்றி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தவாரே காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கூறினர். கூட்டத்தின் இறுதியில் பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,” புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், கடைக்கு செல்வது மற்றும் திருமணம், இறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பங்கேற்பது போன்றவையே முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நம்முடைய மாநிலத்தில் தினம்தோறும் 1200 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர். அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற் கொள்வதற்கு மாநில அரசு சார்பாக ரூ.1.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மருத்துவ கருவிகள் மட்டுமே ரூ.1.2 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலமாக அரை மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, எந்தப் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் தற்போது கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாளை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். ஊரடங்கு மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமன்றி வருகின்ற 31ம் தேதி வரை தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை ஏழு மணி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். சமூகவலைத்தளங்களின் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.