தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற அவரின் இல்லம் முன்பு கூடிய தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கொரோனா பரவல் காரணமாக விஜயகாந்த் யாரையும் சந்திக்கவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்.
எதிர்காலத்தில் நிலை என்பது பற்றி நேரம் வரும்போது விஜயகாந்த் பொதுக்குழுவில் கூறுவார். நாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினர் அனைவருடைய விருப்பமாக உள்ளது. திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை சரியாக செய்திருக்கிறது. தமிழ் மொழி மட்டுமே தங்களின் உயிர். பிறமொழிகளை கற்றுக் கொள்வதில் எவ்வித தவறும் இல்லை.
மும்மொழி கொள்கையை எதிர்த்து வருபவர்களின் வீடுகளில் இருக்கின்ற குழந்தைகள் தமிழ் மட்டுமே தான் பேசுகிறார்களா? தேசியக் கொடியை அவமதித்த விவகாரத்தில் நடிகர் எஸ்வி.சேகருக்கு ஒரு நியாயம்? திமுக தலைவருக்கு ஒரு நியாயமா? கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி அவருக்கே தெரியாத நிலையில், எனக்கு எப்படி தெரியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.