மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களைக் கூற மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, தற்போது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த்துள்ளார். “கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது தான் இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற அவைகளில் தேசிய கல்விக் கொள்கை-2020 பற்றி விவாதிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான விவாதங்களை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
இதன் விளைவாக தேசிய கல்விக் கொள்கையை ஆராய அமைக்கப்பட்ட குழுவும் தங்களது பணியை தொடங்கவில்லை என்பது வேதனையை அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கல்வி செயலாளர், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தேசிய கல்வி கொள்கை குறித்த தங்களது கருத்துக்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியது நடைமுறையில்லை. எனவே இதுகுறித்து முதலமைச்சர் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.