ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக எம்பி. கனிமொழி ஆறுதல் அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆறாம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் கயத்தாரில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று ஓட்டப்பிடாரம் தாலுகா கோவிந்தாபுரம் கிராமத்தில் இருக்கின்ற பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்த கனிமொழி, தனது அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அவருடன் திமுக எம்எல்ஏ கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கனி மொழி பேசும் போது, ” பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், தகுந்த வேலை வாய்ப்பும் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.