புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. அதனால் பல்வேறு நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதல் படுக்கைகள் அமைப்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு நடத்தினார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவர் அங்கு இருக்கின்ற கல்லூரி மாணவர் விடுதியையும் பார்வையிட்டார். அங்கும் 300 படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பரிசோதனை செய்யும் இடத்தை ஆய்வு செய்த அவர், மக்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சோதனை முடிவுகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ” கொரோனா பரிசோதனை செய்தவர்கள் அனைவருக்கும் அதற்கு அடுத்த நாளே பரிசோதனை முடிவுகள் பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்து வருகின்ற சில நாட்களில் 3000 பேர்வரை பரிசோதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைகள் அதிகரிக்கும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வரை பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தேவையான அளவுக்கு படுக்கை வசதி செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். அது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி இருக்கிறோம். அதுமட்டுமன்றி மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் தற்போது விடுமுறையில் இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் அறையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் மற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கான போதிய கழிப்பறை வசதி மற்றும் போதிய வசதிகள் அனைத்தும் உள்ளன. தற்போது சுகாதார பணியாளர்கள் தேவை அதிகமாக உள்ளது. அதனால் ஏற்கனவே வேலையை விட்டு நிறுத்தப்பட்ட துப்பரவு பணியாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு வரவேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.