கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி கார்களையும் வழங்கியிருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, ” சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கட்டுக்குள் தான் இருக்கின்றது.
கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்யப்படும். பாடகர் எஸ்.பி.பி மற்றும் எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை சீராக இருக்கின்றது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வைத்திருக்க அறிவுறுத்தி இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.