Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தலையில்லாமல் கிடந்த டீ கடை வியாபாரி… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

மதுரையில் டீக்கடை வியாபாரி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர் சூர்யா நகரிலுள்ள ஜெய் கார்டன் பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் தனது மகன் முருகனுடன்(50) வசித்து வருகிறார். முருகன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் டீக்கடை மற்றும் எண்ணெய் கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கடைக்கு புறப்பட்டுச் சென்று விடுவார். டீ கடையை திறந்து வைத்துவிட்டு, கடைக்கு தேவையான பால் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் வழக்கமாக செல்வார். வழக்கம் போலவே இன்று அதிகாலை 5 மணிக்கு முருகன் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் பால் வாங்க சென்ற போது, சக்தி நகர் அருகே 2 மோட்டார் சைக்கிளில் நான்கு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்து கீழே தள்ளியதால், முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்பதற்கு முன்னரே அந்த நாலு நபர்களும் முருகனை சுற்றிவளைத்தனர். அதனைக் கண்ட முருகன் தப்பி ஓடியுள்ளார். இருந்தாலும் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மூழ்கி சாய்ந்தார். இருந்தாலும் கொலை வெறி அடங்காத அந்த கும்பல் முருகனின் தலையை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் காவல் துறையினர், முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு இருப்பதால் இது முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி அவருக்கு வேறு யாருடனாவது முன்விரோதம் இருக்கின்றதா? என்பது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |